Monday, March 23, 2020

காலம் தந்த பாடம்

 கொரோனா கற்றுத்தந்த பாடம்

  கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது.
ஆம் இது  பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது.

1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990க்கு பின்
 பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலைமை மாறியது. 

 

உலகில் உள்ள  உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது, அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது.

 

குறிப்பாக இந்தத் தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை என்று நினைக்கும் அளவிற்கு வேகம். அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது.

 

மனிதனின் இந்த வேகத்திற்கு இயற்கை போட்ட கடிவாளம் தான் இந்த கோவிட்-19,

 

கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான்  உலகமே இதைக்கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறது. இது மனிதனுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை விட மனதிற்கு ஏற்படுத்திய தாக்கம் ஒரு பாடமாக ஆகிவிட்டது. உலகமே வீட்டிற்குள் அடங்கிக் கிடக்கிறது என்பதைவிட ஒடுங்கிக்கிடக்கிறது என்றால் மிகையாகாது.

 

ஆனால் இயற்கை.....

 

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,  

  • மழை அதன் போக்கில் பெய்கின்றது

  • வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.

  • மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன.

  • யானைகள் உலாவுகின்றன,

  • முயல்கள் விளையாடுகின்றது,

  • மீன்கள் வழக்கம்போல் நீந்துகின்றன‌.

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.

 

ஆனால், 

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது.

 

முடங்கியது உலகமல்ல

மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்.

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,  

உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான். உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக, நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான் ஓடினான், பறந்தான். உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், 

 

கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்.


ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்.

முடங்கி கிடக்கின்றான் மனிதன்,கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்.

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும்  உள்ள  பாதுகாப்பு கூட தனக்கில்லை,

இவ்வளவுதானா நான் என விம்முகின்றான்

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்,

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தைவிட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது.

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் ஏன் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் மொழியில்  பேசுகின்றன‌. 

 மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

வானில் உயரப்பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கு பயமில்லை என்கின்றது கழுகு.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.

 

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளித்தள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு.

 

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடற்கரை வந்து சிரிக்கின்றது மீன். 

 

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,.

 

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல.....

 

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம.. 

 

  • பணம்,பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு
    மகிழ்கின்றது மழலை கூட்டம்,  

  • நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்.

  • பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடபடுகின்றன‌

  • தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று
  • அண்டார்டிக்கா பனிபாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று


ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி  துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்.

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது,

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

மனிதன் தன் திட்டம்,கனவு, வேகம்,ஆசை,எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை 

என உணர்ந்து அடங்கி இருக்கின்றான்.

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி மரத்தில் கட்டி, பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனை போல மனிதனை கட்டிவைத்து பாடம் சொல்லிக்கொடுக்கின்றது காலம்.

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்.

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும்  பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறி கூட்டம்.

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு  ஞானத்தின் எச்சரிக்கை. 

காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தை சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல  எச்சரிக்கின்றது காலம்
அதில் மெல்ல ஞானம் பெற்றுகொண்டிருகின்றான் மனிதன்,
அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக
அடிக்க காலத்துக்கு தெரியாதா என்ன?
மனிதா!..... உலகம்  உனக்கு மட்டுமே சொந்தமில்லை.


No comments:

Post a Comment