Showing posts with label பேக்கேஜிங். Show all posts
Showing posts with label பேக்கேஜிங். Show all posts

Thursday, March 6, 2014

நுகர்வோர் விழிப்புணர்வு: நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டியவை PACKAGING மற்றும் LABEL

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது தாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்துத் தங்களுடைய உரிமைகளை ’நுகர்வோர் அறிந்திருத்தல்’ ஆகும்.
நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டு தோறும் இந்தியாவில் டிசம்பர் 24 ஆம் தேதி தேதி நுகர்வோர் தினம் ( National Consumer Day, December 24 )ஆக அனுசரிக்கப்படுகிறது.
மக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதாகவும், போதிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியதாகவும் உணவுப் பொருட்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தரநிர்ணயங்களை உருவாக்குவதற்காகவும், அவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை, இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவும் இந்த அமைப்பு, உருவாக்கப்பட்டுள்ளது.
உணவு பொருள் விற்பனையில் பேக்கேஜிங் , (PACKAGING) லேபில்  (LABEL) இடுதல் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன .
உணவுப் பொருள்களை தயாரித்த பின்பு, உடனே அல்லது பல நாட்களுக்குப்பின் உள்ளூரில்(அ) வெளியூரில் (அ ) வெளி நாட்டில் பல மைல்களுக்கு அப்பால் விற்பனையாகும் வரை அது கெட்டுப் போகாமல் , காற்றுப் புகாதவாறு , ஒழுகாதவாறு அதன் மணம் கெடாதவாறு, நுகர்வோரை சென்றடையச் செய்யும் முறைக்கு பேக்கேஜிங் (PACKAGING) என்று பெயர்.
இதில் மொத்தமாக பேக் செய்வது, பல சிறிய பொட்டலங்களாக (POCKET) ஒன்று கூட்டி பேக (PACK)் செய்வது என்று பல வகைகள் உண்டு.
கண்ணாடி, டின், அட்டைப்பெட்டி, பேப்பர், பாலிதீன் பைகள், துணிப்பைகள், சாக்கு மூட்டைகள், என்று பேக்கேஜிங் பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல அளவுகளில் சீல் செய்து, மூடி இட்டு, தைத்து, விற்பனைக்கு வரும்.
லேபிள்  (LABEL):
இந்த பேக்கேஜ்கள் மேல் ஒட்டப்பட்டிருக்கும், பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும், மூடியில் எழுதப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களும், வாசகங்களும், எழுத்துக்களும் வரிவடிவங்களும், முத்திரைகளும் 'லேபிள்' (LABEL) எனப்படும்.
இந்த லேபில்கள் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். இதர பிற மொழிகளில் கூடுதலாக இருக்கலாம். இதன் வடிவங்கள், நிறம், எழுத்துக்களின் அளவு, உயரம் அகலம், எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெளிவாக, குழப்பமின்றி, நுகர்வோரைத் திசை திருப்பா வண்ணம், ஏமாற்றாதவாறும் கண்ணுக்குப் புலப்படும் வகையிலும் இருத்தல் அவசியம்.
இவைகளில் ஏதேனும் குறை, வேறுபாடு, தெளிவற்று இருந்தால் அது "தவறான குறியீடு" இட்டது (Misbranded) என்று கருதப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாகும். 
உணவு பொட்டலமாக்க என்ன அடிப்படை பேக்கேஜிங் (packaging) பின்பற்றப்பட வேண்டும் ?
துருப்பிடித்த, உடைந்த எனாமல், ஈயம் பூசப்படாத பித்தளை ISI தரமில்லாத அலுமினியம் பாத்திரங்களை உணவு உபயோகத்திற்குப் பயன்படுத்தக்கூடாது.
பாலிஎதிலின், ஸ்டைரீன் பாலிமர், பி.வி.சி, பாலிபுரோபிலீன், பெட், EAA, EVA, EMAA ஆகிய பிளாஸ்டிக் பொருட்கள் ISI தரத்திற்கு உட்பட்டவையாக இருந்தால் மட்டுமே உணவுப் பயன்பாட்டிற்கு உரியதாகும்.
உஷ்ணப்படுத்தப்பட்ட பால் / பால் பொருட்கள் தானியங்கி முறையில் பேக் செய்யப்படவேண்டும்.
கண்ணாடிபாட்டில் போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடியவை தவிர பிற பேக்கிங் சாதனங்களை மீண்டும் உபயோகிக்க கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உடன் உரிய வெப்ப நிலையில் சேமிக்க வேண்டும் .
எண்ணெய் பேக் செய்ய பயன்படுத்தப்படும் டின் பிளேட்டுகள் ISI தரமுடையதாக இருக்க வேண்டும்.
கேன்ட் (CANNED), பாட்டில்டு (BOTTLE) ப்ளக்சிபிள் பவுச் (FLEXIBLE POUCH) ஆகியவற்றில் பழங்கள், காய்கறிப் பொருட்களை பேக் செய்ய வேண்டிய விபரங்கள் BIS முறைப்படி இருத்தல் வேண்டும்.
கேன்ட்(CANNED) இறைச்சி பொருட்கள் லேக்கர் செய்யப்பட்டு கேன்களில் பேக் செய்யப்பட வேண்டும்.
PDW / Mineral Water பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ISI தரப்படி இருத்தல் அவசியம்.
லேபிளில் இருக்க வேண்டியவை:-
உணவுப் பொருளின் பெயர், வியாபாரப் பெயர். அடங்கியுள்ள பொருட்கள் . தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முழு முகவரி
இறக்குமதி செய்யப்பட்ட உணவுக்கு இறக்குமதியாளர்களின் முகவரி
நிகர அளவு / எடை / எண்ணிக்கை.
பேட்ச் / லாட் / கோட் எண்.
பேக்செய்யப்பட்ட / தயாரித்த நாள் / மாதம், வருடம் .
சிறந்த பயன்பாட்டு நாள் / இறுதி உபயோக நாள் .
அடங்கியுள்ள சத்துக்களின் அளவு / 100gm / 100 ml
சைவ உணவுக் குறியீடு (பச்சை).
அசைவ உணவுக் குறியீடு (பழுப்பு).
உணவுச் சேர்க்கைகள் சேர்க்கப்பட்ட வண்ணங்கள், நறுமணம்.
இறக்குமதி செய்த உணவு தயாரான நாட்டின் பெயர் .
உபயோகிக்கும் முறை (விருப்பப்படி).
பாதுகாக்கும் முறை Storage Condition-(விருப்பப்படி).
வனஸ்பதி / பேக்கரி சார்ட்டனிங் பயன்படுத்தி இருந்தால் TFA உள்ளது என்று குறிப்பிட வேண்டும்.
ஹெல்த் க்ளெய்ம் - Health Claim (விருப்பப்படி)
நீயுட்ரீஷன் க்ளெய்ம் - Nutrition Claim (கட்டாயம்)
இவைதவிர "சட்ட அளவியல் முறை" (Legal Metrology)
லேபிள்கள் பிரிண்ட் செய்யும் முறை:
லேபிள்களில் வெளியிடப்படும் வாசகங்கள் தெளிவாக, கண்ணுக்குப் புலப்படும் வகையில், திசை திருப்பாமல், எளிமையாக இருக்க வேண்டும்.
லேபிளில் மிக முக்கிய பகுதி எனப்படுவது Principal Display Panel என்பதாகும்.
லேபிள்களில் பிரிண்ட் ஆகும் எண்கள் / எழுத்துக்களின் உயரம் இதர அளவுகள் உரிய அளவில் இருக்க  வேண்டும்.
குழந்தைகள் உணவு (Infant Food). (12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் உணவு) டின்களில் இருக்க வேண்டிய குறிப்புகள், எச்சரிக்கைகள், அளவுகள், வாசகங்கள் பற்றிய விளக்கம் இருக்கவேண்டும்.
எண்ணெய் / கொழுப்பு பாக்கெட்களில் "கொலஸ்டிரால் எதிர்ப்பு" டபுள் ரீ பைன்ட் போன்ற வாசகங்கள் இருக்கக்கூடாது.
உணவுக் கொழுப்பு / எண்ணெய் பாக்கெட்களில் "ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை" என்ற வாசகம் இருக்க வேண்டும்.
"ரீபைண்ட் (உணவு எண்ணெய்) எண்ணெய்" பாக்கெட்டுகளில். குறிப்பிட்ட தாவர எண்ணெயின் பெயர் இருக்க வேண்டும்.
இரண்டு எண்ணெய்கள் "அக்மார்க்" அனுமதியுடன் கலந்து பேக் செய்யப்பட்டால் எண்ணெய்களின் அளவு மற்றும் பெயர் குறிப்பிட்ட ”Blended Oil” என்று கூற வேண்டும்.
உணவு வண்ணங்கள்; சேர்க்கப்பட்ட உணவு பாக்கெட்களில் "அனுமதிக்கப்பட்ட நிறம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது" என குறிப்பிட வேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட உணவுச் சத்து சேர்க்கைகள் குறிப்பிட வேண்டும்.
பட்டைகளில் காசியா / சின்னமன் என்று குறிப்பிட்டு விற்கவேண்டும்.
செறிவூட்டப்பட்ட பால், கொழுப்பு நீக்கிய பால், நிலைப்படுத்தப்பட்ட பால் ஆகியவை அதன் பெயர் குறிப்பிட்டு விற்க வேண்டும்.
செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டால் அதன் பெயர் / குழந்தைகளுக்கு ஏற்றதல்ல / for calorie conscious என்று குறிப்பிட வேண்டும்.
பான்மசாலா பாக்கெட் & விளம்பரங்களில் சுப்பாரி (பாக்கு) சுவைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று குறிப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் / Dessert ஆகியவற்றில் பால் கொழுப்பு / உணவு எண்ணெய் / தாவரக் கொழுப்பு அடங்கியது என்று குறிப்பிட வேண்டும்.
உப்பு பாக்கெட்களில் அயோடின் கலப்பதற்கு / இரும்பு சத்து கலப்பதற்கு / மிருக உபயோகத்திற்கு / மருந்துக்கு / preservative க்கு என்று அதன் பயன்பாட்டிற்கு. உணவு சத்துக்கள் சேர்க்கப்பட்ட உணவுகளின் மேல் செறிவூட்டப்பட்டது என்று குறிப்பிட வேண்டும்.
லேபில்களின் மேல் உணவுச் சட்டம் விதிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடாது.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது என்று குறிப்பிடக்கூடாது.
குடிதண்ணீர் பாட்டில்களின் மேல் மருத்துவ குணம் கொண்டது என்றோ, குறிப்பிட்ட ஊர், இடத்தை குறிக்கும் வாசகங்களோ, படங்களோ, இருக்கக் கூடாது.
என்ன தகவல் லேபிளில் காட்டப்பட வேண்டும் ? ஏன்?
சிறந்த பயன்பாட்டு காலம் சேமிப்பு விதிமுறைகளின் கண்டிஷன்களின் படி பாதுகாக்கப்பட்டால் உண்ண உபயோகிக்கத் தகுந்த நாள் / மாதத்தைக் குறிக்க வேண்டும்.
லாட் எண் / கோட் எண் / பேட்ச் எண் - என்பவை உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் உணவுப் பொருளை அடையாளம் காணப் பயன்படும் குறியீடுகளாகும்.
அசைவ உணவு:-
மிருகம், பறவை, மீன், முட்டை ஆகியவை பகுதியாகவோ முழுமையாகவோ அடங்கியது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் அடங்காது.
சைவ உணவு :-
அசைவ உணவில் அடங்காதவை அனைத்தும் சைவ உணவு ஆகும்.
 
“இறுதி உபயோக நாள்" (Expiry Date ) என்பது இந்த நாளுக்குப் பின் விற்கக்கூடாது என்பதை குறிக்கும்.
இது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் முறையாகும்.
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு  பொருட்களுக்கு பல்வேறு குறியீடுகளை வைத்துள்ளன. லேபிளில் இடப்படும் குறியீடுகள் (Sign) என்பது மறுசுழற்சி(Recycle), பாதுகாப்பு(Safety), தரம் (Quality) மற்றும் உபயோகமுறை(Usage) போன்றவைகளை குறிப்பதாகும் இக்குறியீடுகள்(Sign) ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்