Sunday, February 23, 2020

இலைகளின் மூலம் மரங்கள்


  இலைகளின் மூலம் மரங்களை உருவாக்க முடியுமா?

உலகையே திரும்பி பார்க்கவைக்கும், பசுமைப் புரட்சி

     மரம் என்பது அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் ஆகும்.ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை. மரங்கள் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
      நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி  இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன.
        தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல்காற்று மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை மனிதர்களிடையே உணர்த்தியுள்ளது. ஆனால் முக்கியத்துவத்தை  உணர்ந்த அளவுக்கு மரக்கன்று நட வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர்களிடம் இல்லை.
     இயற்கை நமக்கு அளித்த எண்ணற்ற கொடையை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் அழியும் தருவாயில் பத்து லட்சம் உயிரினங்கள் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் கொடுத்திருந்தது இதில்  பல்லாயிரக்கணக்கான செடிகள், மரங்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பறவையினங்கள், பூச்சி இனங்கள் என எண்ணற்ற உயிரினங்கள் அடங்கும்.
       இவ்வுலகையும் உலகில் வாழும் உயிர்களையும் உயிர்வித்துக் கொண்டிருக்கும் ஒரே இனம் "மரங்களே" சமீபகால மாற்றங்களாலும் நகரமயமாதல்  மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மரங்கள் அழிக்கப்பட்டு பூமியே பாலைவனமாக மாறிவருவதை எவரும் மறுத்திட முடியாது. இதன் காரணமாக  ‘’சூழ்நிலை சமநிலைக்கு’’ பங்கம்  ஏற்பட்டுள்ளது.

 இதற்கு ஒரே தீர்வு மரம்!... மரம்!...மரம் மட்டுமே


          ஆகையால் இழந்த மரங்களை மீண்டும் உருவக்குவதும் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மரங்கள் அடர்ந்த வனங்களை பெருக்குவதற்குண்டான ஒரு எளியமுறை பற்றியதே இந்த பதிவு.
       இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஒழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி இருந்தால் செடி தானாகவே செழித்து வளரும் என்பதே இதுவரை நாம் அறிந்தது. அதிலும் மண் பதியம், விண் பதியம், ஓட்டு கட்டுதல் மற்றும் திசு வளர்ப்பு என பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன.
      ஆனால்... ஓர் இலையை பிடிங்கி நட்டால் அது செடியாகுமா? விதையில்லாமல் செடியை உருவாக்க முடியுமா? எனக் கேட்டால் நம்மை அனைவரும் மேலிருந்து கீழாக பார்ப்பார்கள்.
       மேற்கூறிய தொழில்நுட்பங்கள் எதிலும் சேராமல் புதிதாக “இலை பரப்புதல்” மூலம் அதிக மகசூல் தரக் கூடிய தாவர, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தாவரவியல் துறையில் புதிய சாதனை கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் ஒருவர். அவர் தான்  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளரான எஸ்.இராஜரத்தினம்.
 
மரமாகும் இலைகள்:
      ஆம்.ஓர் விதையில் இருந்து ஓர் மரம் .அதில்  உள்ள லட்சக்கணக்கான இலைகள் மூலம் லட்சக்கணக்கான மரங்களை உருவாக்க முடியும் என்ற இந்த கண்டுபிடிப்பு உலகத்தின் காடு வளர்ப்பு முயற்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உலகத்தையே  பசுமையின் பாதைக்கு எளிதில் கொண்டு செல்லும் என்பதில் சிரிதும் ஐயமில்லை.
இது எவ்வாறு சாத்தியமாயிற்று,
    இலைவழி நாற்று உருவாக்கம் குறித்து அவரே விளக்குகிறார்.  நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு,  முதுகலை பயின்று கொண்டிருந்த போது முற்றிலும் புதிதாக குறைந்த செலவில் ஓர் முறையில் தாவரங்களை உருவாக்கவேண்டும் என முயற்சி மேற்கொண்டு வந்தேன். 
வேர்விடும் இலைகள்
   அப்போதுதான், ஓர் தாவரத்தில் உள்ள இலைகளைப் பறித்து, விதைகளுக்குப் பதிலாக அவற்றை நட்டு செடிகளாக உருவாக்க முடியுமா என முயற்சித்தேன். முற்றிலும் இயற்கையான முறையில் இலைகளைப் பறித்து அவற்றை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடுகிறது. இதுவே  எனது புதிய கண்டுபிடிப்பாகும் என்றார்.
    பொதுவாக வேர்த்தூண்டலுக்காக சில ஹார்மோன்களைப் பயன்படுத்துவார்கள் ஆனால் நாங்கள் அவ்வாறு எதையும்  பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில்  இளநீரை மட்டுமே பயன்படுத்தினோம் என்கிறார் இவர்.

இலை வழி நாற்று உற்பத்தி:
    பொதுவாக நர்சரி கார்டனில் ஆண்டுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்குவதை லட்சியம் எனக் கொண்டால், 10 லட்சம் விதைகள் தேவைப்படும். இதைத் தவிர்க்க ஓர் மரத்தில் அல்லது செடியில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையைப் போல பயன்படுத்தலாமே என்ற யுக்தியின் அடிப்படையில்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறது. அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கிறதாம்.
     தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் உள்ள டைரக்ரேட் ஆப் அக்ரி பிசினஸ் டெவலப்மெண்ட் இயக்ககம்,இந்திய அரசின் சிறு, குறு, மத்திய  தொழில்களுக்கான அமைச்சகம்  இவரை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து அவர் கூறும்போது,
         இவ்வாறு  இலை வழி நாற்று உற்பத்தியின் மூலம் கலப்படம் இல்லாத மரபணு தூய்மையான நாற்றுகள் கிடைக்கின்றன. எனவே இவற்றின் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே   இத்தகைய செடிகளையே விவசாயிகள் அதிகளவில் விரும்புகின்றனர் என்கிறார்.
      இவர் இதுவரை இவ்வாறு இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளார். தற்போது இவ்வாறு வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டுருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


பயிற்சி:
      ஈடன் நர்சரி கார்டனில் வேளாண் கல்லாரி மாணவ, மாணவியருக்கு புதுமையான நாற்று உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி பட்டறை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமான வேளாண் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
     இந்த குளோனிங் முறையில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான  Organic Compounds அதிகம் உள்ள தாவரங்களை உருவாக்கித் தருவதால் தொழிற்சாலைகளின் லாபம் அதிகரிப்பதோடு, விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவரால் பயனடைந்துள்ளனர். 
        மரக்கன்று வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் ராஜரத்தினத்துக்கு, அவரது கண்டுபிடிப்பு மற்றும் சமூக பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள், பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு  அதிகளவில் மரக்கன்றுகளை உருவாக்கி நடவும், அரிய வகை மூலிகைத் தாவரங்களை மீட்டு எடுக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளது.
       மேலும், இந்தியாவிலேயே முதல் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் நர்சரியாக ஈடன் நர்சரி கார்டன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    இவரது இலை வழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும்,அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து விட்டால், இயற்கையை அழிவிலிருந்து காக்க முடியும். இம்முறையின் மூலம்   
    இவரது பண்ணையில் நாற்றுகளை பெற விரும்புவோர் அல்லது பயிற்சிபெற விரும்புவோர் www.edunnurserygardens.com  என்ற இணையதள முகவரியில் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment