Wednesday, January 24, 2018

அன்னைத் தமிழுக்கு அழகிய இருக்கை

            இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் செய்தி, தமிழர்களை நெஞ்சம் நிமிர்த்த வைத்திருக்கிறது.
தமிழர்க்கு இது எத்தனை பெருமை வாய்ந்தது. 
உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதை  இந்த தமிழ் இருக்கை  எடுத்துக் கூறப்போகிறது.

தமிழ் இருக்கை என்றால் என்ன?
    உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவரும் முதன்மையான பல்கலைக்கழகங்களில் உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு இல்லாத துறைகளே இல்லை;இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை.எனவே,உலக அளவில் தமிழுக்கான ஒரு ஆராய்ச்சித் துறையே "தமிழ் இருக்கை" ஆகும் 

தமிழுக்கு  இருக்கை (துறை) ஏன் ?

       தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குகிறது. அண்மையில் ஒரு செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. 
        பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களுள் அடங்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற  பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது.   
        உலக அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்த குறைபாடுகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

    தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்”

தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?

        உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக்கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.

      தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல்லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும்.


ஏன் ஹார்வார்டு பல்கலைக்கழகம்?

       ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை;இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை என்று கூறத்தக்க அளவில், ஆராய்ச்சிகளுக்குக் கிள்ளிக்கொடுக்காமல், மில்லியன்களில் டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது ஹார்வர்டு.
          இங்கே மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை, ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்வது கடந்தகால, நிகழ்கால வரலாறாகும். 
            இந்தப் பல்கலையின் முன்னாள் மாணவர்கள், இங்கே பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரில் 47 பேர், கடந்த நூறாண்டுகளில் உலகின் உயரிய நோபல் விருதைப் பெற்றிருக்கிறார்கள். ஹார்வர்டின் தனிச்சிறப்பாக அனைவரும் கூறுவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’.
       இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறதா?
ஆம்!
ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின்கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன.ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின்கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதன் விதை எப்போது உருவானது?

     அவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.இதில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத்தான் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

            ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மீதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலாப நோக்கற்ற நிறுவனம் (Tamil Chair Inc)ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

        ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:
மருத்துவர் விஜய் ஜானகிராமன்,
மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம்,
திருமதி வைதேகி ஹெர்பெர்ட்,
திரு பால் பாண்டியன்,
திரு அப்பாதுரை முத்துலிங்கம்,
முனைவர் சொர்ணம் சங்கர்,
திரு குமார் குமரப்பன்,
முனைவர் ஆறுமுகம்முருகன்
ஆகியோர் ஆவர்.
    வாழ்க  தமிழ்!

No comments:

Post a Comment